சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் ஒளிவிழா
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது.
மேலைத்தேய நாடுகளில் „Advent’ என்று அழைக்கப்படும் நான்கு வாரங்களையே நாம் தமிழில் திருவருகைக்காலம் என அழைக்கிறோம். திருவருகைக் காலம்…….கிறிஸ்த்துவுக்காக காத்திருந்த 400 ஆண்டுகளை நான்கு கிழமைகளாக முன்னிலைப்படுத்தி…….நான்கு ஒளிகளை ஏற்றி கிறிஸ்து பிறப்பிற்கு தம்மை ஆயத்தப்படுத்தும் காலமாகும்.
திருவருகைக் காலத்தின் முதலாவது ஒளி…………
இந்த ஆண்டிற்காக திருச்சபையால் முன்வைக்கப்பட்ட சிந்தனையான „ அன்பர் வருகிறார், எனவே அன்பில் இணைந்த குடும்பங்கள் ஆவோம்.’ என்ற கருத்துக்கமைய, கடவுள் எம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக….. தமது ஒரே மகனை இவ்வுலகத்தில் மனிதனாக பிறக்கச்செய்த இந்நாளை கொண்டாடும் நாம், அவரது வருகையை உணர்ந்து, அவரது அன்பை அனைவருக்கும் அறிவிப்பதோடு, அன்பின் குடும்பங்களை எமது மத்தியில் உருவாக்குவோம் என்ற சிந்தனையை முன்நிறுத்தி முதலாவது ஒளி ஏற்றப்பட்டது.
திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஒளி…………..
எமது நினைவுகளில் ஆழமான வடுக்களாக பதிந்துள்ள ஆழிப்பேரலை 13ம் ஆண்டு நினைவு நாளையும், முள்ளிவாய்கால் இனவழிப்பின் பேரவலத்தையும் …… எமது மண்ணில் உயிர்நீத்த மாவீரர்கள், மாமனிதர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டாவது ஒளி ஏற்றப்பட்டது.
திருவருகைக் காலத்தின் முன்றாவது ஒளி……..தாயகத்தில் வாழும் எமது உறவுகள்….. தம் சொந்தமண்ணில் நிம்மதியாகவும், சுகந்திரமாகவும் வாழவும்….நீதியான, நியாயமான முறையில் நடத்தப்படவும்…. உறவுகளுடன் இணைந்து உரிமையுடன் வாழும் நிலையைப்பெற்றிட….. இறைவனின் இரக்கத்தை வேண்டி……… மூன்றாவது ஒளி ஏற்றிவைக்கப்பட்டது.
இறுதியாக திருவருகைக் காலத்தின் நான்காவது ஒளி எமது தமிழாலயத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தியும்….எமது நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாதுகாவலர்கள் அனைவரையும் இறைவனின் இரக்கத்தில் ஒப்படைத்து அவர்களை இறையாசியோடு வழிநடத்துமாறும் வேண்டி நான்காவது ஒளி ஏற்றப்பட்டது.
„ அன்பர் வருகிறார், எனவே அன்பில் இணைந்த குடும்பங்கள் ஆவோம்.’! எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழைந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் பெற்றோர்களின் மனதினில் ஆழமாக பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
150 க்கும் மேலான மாணவர்களுடன் நடைபெற்ற ஒளிவிழாவில் உறவுகள் ஒருங்கிணைந்து அன்பை பகிர்ந்தளித்து ஆனந்தம் அடைந்த காட்சிகளாக அமைந்ததோடு இறுதியில் குழந்தைகளை மகிழ்விக்கும் முகமாக கிரிஸ்மஸ் தாத்தா இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்.