யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா 2017
பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும் மற்றும் மக்களுக்குமான அகவணக்கத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது.கடுமையான வெண்பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தாயகத்தின் தைப்பொங்கலை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் பொங்கல் பொங்கி பொங்கலோடு முக்கனிகளும் சேர்த்துக் கதிரவனுக்குப் படைக்கப்பட்ட காட்சி தமிழர் திருநாளின் நினைவகலாப் பதிவாகும்.
தொடர்ந்து மாணவர்களால் தமிழர்களின் இயல் இசை நாடக நிகழ்வுகளும் கவியரங்கம் ,நடனங்கள் போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.தொன்மைச் சிறப்புமிக்க தமிழரின் பண்பாட்டையும் வாழ்வியலையும் வெளிப்படுத்தும் தமிழர் திருநாள் தமிழ்க் கல்விக்கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்களால் கொண்டாடப்பட்டமை எமது பண்பாடு இளைய தலைமுறையினரிடம் கையளிக்கப்பட்டமையையும் அதனை அவர்கள் விருப்புடன் கையேற்று இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கையளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டிகாட்டி நின்றது.
தாயகத்தில் வறுமையில் வாடித் துடிக்கும் எமது உறவுகளுக்கு உதவிக்கு கரம் நீட்டும் முகமாகவும் இத் தமிழர் திருநாள் மாணவர்களால் கடைப் பிடிக்கப்பட்டது. பேர்லின் தமிழாலயத்தாலும் , தமிழாலய பெற்றோர்களாலும், தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகளின் விபரங்கள் திரையில் காண்பிக்கப்பட்டது. தமிழ் மொழியின் பெருமையையும் , தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகளையும் மையப்படுத்தி பேர்லின் தமிழாலயத்தின் இளம் பெற்றோரின் மற்றும் படைப்பாளியின் உருவாக்கத்தில் வெளிவந்த ‘அடிசில் 2017’ – தமிழ் இலக்கிய உணவு நாட்காட்டியும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.