யேர்மனியில் தமிழின் திறனை மீண்டும் நிலைநிறுத்திய தமிழாலயங்கள்
தமிழ்க் கல்விக் கழக நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் யேர்மனியில் இயங்கும் தமிழாலய மாணவர்களிடையே ஆண்டு தோறும் வாசித்தல், உரையாற்றல், கவிதை, ஓவியம், சொல்வதெழுதுதல், உறுப்பமைய எழுதுதல், கட்டுரை, மனனம் போன்ற விடயங்களை மையப்படுத்தி தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வரிசையில் இவ்வாண்டுக்கான போட்டிகள் டிசெம்பர் மாத ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. 120 தமிழாலயங்களில் தமிழ்மொழி பயிலும் மாணவர்களில் 1640 போட்டியாளர்கள் 2791 போட்டிகளில் பங்குபற்றினார்கள். மாணவர்களின் வசதிக்கேற்றவாறு போட்டிகள் ஒரே நாளில் ஐந்து விசேட நிலையங்களில் மாநிலத் தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை நடுவம் செய்வதற்கென 170 க்கு மேற்பட்ட விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
நிறைவு பெற்ற மாநிலப் போட்டிகளில் ஒவ்வொரு விடயங்களிலும் வயதுப்பிரிவு நிலையில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற மாணவர்கள் 18.02.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்குபற்றும் தகுதிநிலையை பெறுவார்கள்.